×

ரூ.100 கோடி கடன் தருவதாக மும்பை தொழிலதிபரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த மேலும் 3 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷியாமல் சட்டர்ஜி புகார் ஒன்று அளித்தார். அதில், நான் நாக்பூரில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய பணம் தேவைப்பட்டது. இதனால் தரகர்கள் மூலம் சென்னை ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா காலனியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டேன். அப்போது தனியார் நிறுவனத்தின் இயக்குநர்களான பன்னீர்செல்வம், இம்தியாஷ் அகமது, பவன்குமார், கார்த்திக், காமராஜ், கிஷோர் ஆகியோர் தங்களது நிறுவனத்தின் மூலம் ரூ.100 கோடி கடன் தருவதாக உறுதி அளித்தனர்.

கடன் தொகைக்காக 6 மாத வட்டியாக முன்தொகை ரூ.4 கோடி தர வேண்டும் என்று கூறினர். அதை கொடுத்தேன். ஆனால் சொன்னபடி அவர்கள் எனக்கு கடன் தராமல் அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகினர். எனவே, அவர்களை கைது செய்து, எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரசித் தீபா விசாரணை நடத்தினார். அதில், மும்பை தொழிலதிபரை ஏமாற்றும் வகையில் ஈஞ்சம்பாக்கத்தில் மாதம் ரூ.1.50 லட்சம் வாடகையில் பங்களா வீடு ஒன்று எடுத்து, போலியான பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி அதன் மூலம் கடன் கேட்டு வந்த தொழிலதிபர் ஷியாமல் சட்டர்ஜியை ஏமாற்றியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து கடந்த மார்ச் 16ம் தேதி கோவளம் அருகே உள்ள சொகுசு விடுதியில் பதுங்கி இருந்த பன்னீர்செல்வம் (43), இம்தியாஷ் அகமது (எ) சதீஷ்குமார் (37) மற்றும் பவன்குமார் (எ) ரவி (எ) நியமத்துல்லா (45) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த காமராஜ் (32), கார்த்திக் (34), கிஷோர் சிவாஜி (31) ஆகியோரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வந்தனர். பின்னர் 3 பேரும் பனையூரில் உள்ள பங்களா ஒன்று பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பனையூரில் உள்ள பங்களாவில் பதுங்கி இருந்த 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிகளிடம் இருந்து போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ரூ.100 கோடி கடன் தருவதாக மும்பை தொழிலதிபரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த மேலும் 3 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Central Crime Branch ,Chennai ,Shyamal Chatterjee ,Maharashtra ,Chennai Police Commissioner's Office ,
× RELATED மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது..!!